இந்தியா

பாஜகவில் இணைந்தார் தெலங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் 

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலங்கானா ராஷ்ட்ர சமதி கட்சியின் மூத்த தலைவருமான ஈடல ராஜேந்தர் இன்று பாஜகவில் இணைந்தார்.

தெலங்கானா தனி மாநிலப் போராட்டத்தில் நீண்ட ஆண்டு களாக முதல்வர் சந்திரசேகர ராவுடன் பங்கேற்று வந்தவர் ஈடல ராஜேந்தர். பின்னர் தெலங்கானா மாநிலம் உருவானதும், டிஆர்எஸ் கட்சியில் இவரின் பங்கு முக்கிய மாக கருதப்பட்டது.

தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்த தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில், முதலில் நிதி அமைச்சராகவும், இரண்டாவது முறையாக சுகாதார துறை அமைச்சராகவும் ராஜேந்தர் பதவி வகித்தார்.

இவர் மீது நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் பகிரங்க விசாரணைக்கு உத்தரவிட்டார். அமைச்சர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதனால், முதல்வருக்கும், ஈடல ராஜேந்தருக்கும் இடையே மோதல் வெடித்தது. டெல்லி சென்று பாஜகவை சேர்ந்த சில மூத்த நிர்வாகிகளையும், மத்திய அமைச்சர்களையும் ஈடல ராஜேந்தர் சந்தித்து விட்டு வந்தார்.

நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இவர் ராஜினாமா செய்த ஹுஜாராபாத் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் ஈடல ராஜேந்தர் பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஈடல ராஜேந்தர் பாஜகவில் இணைந்தார். அப்போது மத்திய அமைச்சர் கிஷோர் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தார்.

SCROLL FOR NEXT