இந்தியா

‘ஜல் ஜீவன்' திட்டத்துக்கு அதிகபட்சமாக உ.பி.க்கு ரூ.10,870 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தில் ‘ஜல் ஜீவன்'திட்டத்தை செயல்படுத்த அம்மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,870 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

நாடு முழுவதும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க 'ஜல் ஜீவன்' திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வரும் 2024-ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டு பட்ஜெட் டில் இத்திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.

இதனிடையே, ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதற் காக 2019-ம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட தொகையை மத்திய ஜல் சக்தி துறை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில், மேற்குவங்கத்துக்கு கடந்த வாரம் 6,998.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்துக்கு முறையே ரூ.3,410கோடியும், ரூ.5,117 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.9,262 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள உத்தரபிரதேச மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,870 கோடியை மத்திய ஜல் சக்தி துறை நேற்று ஒதுக்கியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள 97 ஆயிரம் கிராமங்களில் 2.63 கோடி வீடுகள் உள்ளன. அவற்றில் 30.04 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப் பட்டிருக்கிறது. ‘ஜல் ஜீவன்' திட்டத்துக்கு முன்பாக வெறும் 5.16 லட்சம் வீடுகள் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பை பெற்றிருந்தன. இன்னமும் 2.33 கோடிவீடுகளுக்கு குடிநீர் குழாய்இணைப்பு வழங்க வேண்டியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - பிடிஐ

SCROLL FOR NEXT