மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், சாக்கடையை சுத்தம் செய்ய ஒப்பந்தம் எடுத்த நபர் அந்தப் பணியை முறையாக செய்யாததால் அவரது தலையில் குப்பையைக் கொட்டி தண்டனை நிறைவேற்றியதால் சிவசேனா எம்எல்ஏ சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் வடக்கு மும்பைக்கு உட்பட்ட கண்டிவாலா தொகுதியின் எம்எல்ஏ திலீப் லண்டே. கடந்த சில நாட்களாக மும்பையில் தென்மேற்கு பருவமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில், இவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து சாலைகளில் தேங்கியது.
இதனால் தொற்று அபாயம் இருப்பதாக தொகுதி மக்கள் எம்எல்ஏவிடம் புகார் தெரிவித்தனர். இதனால், மழைநீர் தேங்கிய பகுதிக்கு ஒப்பந்ததாரரை அழைத்துவந்த திலீப் லாண்டே எம்எல்ஏ, அவரை மழைநீர் தேங்கிய பகுதியில் அமரவைத்தார். பின்னர், அவர் கண் அசைக்க இரண்டு பேர் வந்து அந்த நபரின் தலையில் குப்பை, சேறு, சகதியை கொட்டினர்.
இது தொடர்பாக பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், எனது தொகுதிக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் கடந்த சில காலமாகவே சாக்கடை தேங்கியிருக்கிறது. குப்பைகளும் சரியாக அகற்றப்படுவதில்லை. சமீபமாக பெய்த பருவமழையால், கழிவுநீரும் மழைத்தண்ணீரும் சேர்ந்து சாலைகளில் தேங்கியது.
ஆனால், கடமையைச் செய்யவேண்டிய ஒப்பந்ததாரர்கள் இந்தப் பக்கமே வருவதில்லை. மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து என்னை எம்எல்ஏவாக தேர்வு செய்துள்ளனர். அதனால் தான் நானே இப்பகுதியை சிவசைனிக்குகளைக் கொண்டு சுத்தம் செய்தேன்.
அதை உணரவே இந்தத் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மும்பை பிஎம்சி மாநகராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா ஆதிக்கம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.