தலைநகர் டெல்லியில் நாளை முதல் கோயில்கள் திறக்கப்படுகிறது. உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் இன்னும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில், கடந்த மார்ச் தொடங்கி கரோனா உச்சம் தொட்டது. ஏப்ரல் மாதத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அன்றாடம் கொத்துகொத்தாக மக்கள் பலியாகினர்.
இதனால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக தொற்று குறையத் தொடங்கியது. இதனால் அங்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் கேஜ்ரிவால் அன்லாக் 3.0 சலுகைகளை அறிவித்திருக்கிறார்.
அன்லாக் 3.0வில் எதற்கு அனுமதி; எதற்கு தடை?
இதுவரை உணவகங்களுக்கு பார்செல், டோர்டெலிவரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் உணவகங்களில் 50% பேர் அமர்ந்து சாப்பிடலாம்.
* வாரச்சந்தைகளும் 50% கடைகள், வியாபாரிகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* சலூன்கள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், ஸ்பாக்கள் செயல்படக் கூடாது.
* அரசு அலுவலகங்கள் முழு வருகைப்பதிவோடு இயங்கலாம்.
* தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்..
* டெல்லி மெட்ரோ ரயில்களும், டெல்லி பேருந்துகளும் பாதியளவிலான பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
* பள்ளி, கல்லூரிகள் இப்போதைக்கு மூடியே இருக்கும்.
* நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீர் விளையாட்டு பூங்காக்கள் மூடியிருக்கும்.
* கோயில்கள் திறக்கப்படும் ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள் குறித்து அறிவித்த முதல்வர் கேஜ்ரிவால், "இப்போதுபோல் கரோனா தொற்றின் வேகம் கணிசமாகக் குறைந்தால், டெல்லி மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பும். அதுவரையில் இந்த துயரமான சூழலை நாம் சேர்ந்தே எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.
முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 213 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவு.