திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்குவதற்காக மொத்தம் 7,200 அறைகள் உள்ளன. எனினும் பிரம்மோற்சவம், புரட்டாசி சனிக்கிழமை உள்ளிட்ட விசேஷ நாட்கள் மற்றும்விடுமுறை நாட்களில் அறைகளுக்காக பக்தர்கள் பல இடங்களுக்கு அலைய வேண் டியுள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று கூறியதாவது:
பக்தர்களின் வசதிக்காக திருமலையில் தங்கும் அறைகள் பெறுவதற்கு ராம்பக்கீச்சா, கவுஸ்துபம் தங்கும் விடுதி, பஸ் நிலையம், ஜிஎன்சி டோல்கேட், எம்.பி.சி. ஆகிய 6 இடங்களில் புதிய பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இங்கு சென்று, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஓர் அடையாள அட்டையை காண்பித்து அறைகளுக்கு பதிவு செய்யலாம். சிறிது நேரத்தில் அவரவர் செல்போனுக்கு தகவல் வந்ததும், குறிப்பிட்ட விடுதிக்கு சென்று, அங்கு பணம் செலுத்தி அறைக்கான சாவியை பெற்றுக் கொள்ளலாம். இதனால் பக்தர்கள் இனி காத்திருக்க வேண்டாம்.
இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார். முன்னதாக இந்தப் பதிவு மையங்களை அவர் திறந்து வைத்தார். இந்தப் புதிய நடைமுறைக்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருமலையில் தங்கும் அறை எடுப்பது மிகவும் சுலபமாக உள்ளது என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.