காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வதேராவுக்கு நெருக்கமான இளம் தலைவர் ஜிதின் பிரசாத் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். ஜிதினை, உ.பி. தேர்தலில் முதல்வர் வேட்பாளராக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், ராகுலுக்கு நெருக்கமான ராஜஸ்தான் இளம் தலைவர் சச்சின் பைலட் முதல்வராக விரும்பினார். ஆனால், அசோக் கெலாட்டை முதல்வ ராக்கியதால் அதிருப்தியில் உள்ளவர் கடந்த வருடம் 18 எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி உயர்த்தி இருந்தார். அப்போது பாஜகவிற்கு சச்சின் செல்வதாகப் பேச்சு எழுந்தது. பிறகு அவரது வேறு சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி கட்சி தலைமை சமாதானப்படுத்தியது.
தற்போது ஜிதின் பாஜகவிற்கு தாவிய நிலையில், மீண்டும் சில முக்கியத் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதில் சச்சின் பைலட், தமக்கு கட்சி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டு தலைமைக்கு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப் படுகிறது. அவர் இதில், தனது ஆதரவாளர்களை அமைச்சர வையில் சேர்க்க வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது. இவரது கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் சச்சின் பைலட், பாஜக தாவும் வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது.
இதேபோல், பஞ்சாபிலும் முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்துவும் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளார். பாஜகவில் இருந்த முக்கியத் தலைவரான இவர், பஞ்சாப் முதல்வரான அமரீந்தர் சிங்கிற்கு எதிராக விமர்சனங்கள் செய்து வருகிறார். இப்பிரச்சினை முடியாவிட்டால், பஞ்சாபின் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மிக்கு சித்து தாவும் சூழல் தெரிகிறது.
இதற்காக காங்கிரஸ் தலைமை நியமித்த 2 குழுவினர், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், அதிருப்தி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை்களை சமர்ப்பித் துள்ளனர். அந்த பரிந்துரைகளை செயல்படுத்த சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸ் தலை வர்கள் கூறும்போது, ‘‘அதிருப்தி தலைவர்களின் கோரிக் கைகளை நிறைவேற்றுவதை தவிர வேறு வழியில்லை. ராஜஸ்தானிலும், பஞ்சாபிலும் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடக்கலாம். சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களுக்கு உரிய பதவி அளிக்கப்பட்டு, சித்து பஞ்சாபில் முதல்வருக்கு அடுத்த நிலையில் முக்கியத்துவம் பெறுவார்’ எனத் தெரிவித்தனர்.