இந்தியா

கேஜ்ரிவால் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் அருண் ஜேட்லி அவதூறு வழக்கு

பிடிஐ

தன் மீது தவறான அவதூறு பரப்பும் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 6 பேர் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி தன் மீது அவதூறு பரப்பியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் எனவும் ஜேட்லி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவராக அருண் ஜேட்லி இருந்த 13 ஆண்டு காலத்தில், பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

'குறிப்பாக அணி தேர்வின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தவிர போலி நிறுவனங்களின் பெயர்களில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. இந்த ஊழலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜேட்லி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து நியாயமான நேர்மையான விசாரணை நடை பெற, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி ஜேட்லியிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறவேண்டும்.

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தை புனரமைக்க ரூ.24 கோடி ஒதுக்கப்பட் டது. ஆனால், கூடுதலாக ரூ.90 கோடி பெறப்பட்டுள்ளது. அந்தப் பணம் எங்கு போனது?

ஒரே பெயரில் ஒரே முகவரியில் ஒரே இயக்குநர் பெயரில் உள்ள 5 நிறுவனங்களுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. செய்யாத வேலைக்கு அந்த நிறுவனங்களுக்கு பணம் கொடுத்ததாக போலியாக கணக்கு காட்டி உள்ளனர்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைப்பதற்கும், டிடிசிஏ ஊழல் தொடர்பான ஆவணங்களை எடுத்துச் செல்லவுமே தலைமை செயலகத்தில் திடீரென சிபிஐ சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து எங்களுக்கு மட்டுமல்லாமல், அவருடைய கட்சித் தலைவர்களுக்கும் ஜேட்லி பதில் அளிக்க வேண்டும். பதில் சொல்வதுடன் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்' என வலியுறுத்தினர்.

இந்நிலையில், ஜேட்லி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட 6 பேருக்கு எதிராக சிவில் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

ஆதாரமில்லா குற்றச்சாட்டு - அருண் ஜேட்லி

முறைகேடு குறித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள அருண் ஜேட்லி, ‘‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மெகா ஊழல்கள் நடந்தன. அந்த வழக்குகள் எல்லாம் தற்போது என்னவானது என்றே தெரியவில்லை. ஆனால் ஆதாரம் ஏதுமில்லாமல் என் மீது குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன’’ என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் வெளிநடப்பு

நாடாளுமன்ற மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று பேசிய அருண் ஜேட்லி, ‘‘42 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில், டெல்லி கிரிக்கெட் மைதானம் ரூ. 114 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ஜவாஹர்லால் நேரு மைதானத்தை புதுப்பிக்க ரூ.900 கோடி செலவிடப்பட்டது’’ என்று குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிட்டபோது, ‘‘உண்மை எப்போதும் கசப்பாகவே இருக்கும். எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதி காத்து இருக்கையில் அமரவேண்டும்’’ என ஜேட்லி கேட்டுக் கொண்டார். இதனால் ஆவேசமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

SCROLL FOR NEXT