பாஜகவின் தேசிய துணைத் தலைவரான முகுல் ராய், தாய்க் கட்சியான திரிணமூல் காங்கிரஸில் இன்று இணைந்தார். மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் ஒரே தலைவர் மம்தா பானர்ஜி என்று அவர் புகழாரம் சூட்டினார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தவர், பாஜகவில் இணைந்தார். அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
திரிணமூல் காங்கிரஸிலிருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்த முகுல்ராய்க்கு, பாஜகவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பேசப்படுகிறது. கட்சியின் மாநிலத் தலைவர் திலிப் கோஷ், தேசியச் செயலர் ராகுல் சின்ஹா ஆகியோரைத் தாண்டி முகுல் ராயால் செயல்பட முடியவில்லை என்றும் கூறப்பட்டது. 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அவர் திரிணமூலுக்குத் திரும்ப யோசித்ததாகவும் தகவல் வெளியானது.
இதற்கிடையே முகுல்ராயின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முகுல் ராயை அபிஷேக் பானர்ஜி மருத்துவமனையில் சந்தித்துப் பேசினார். அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் முகுல்ராய் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர், பாஜகவில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கே திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் பவனுக்கு மகன் ஷுப்ரன்ஷுவுடன் வந்தார் முகுல் ராய். அங்கே முதல்வர் மம்தா பானர்ஜியுடன் அபிஷேக் பானர்ஜியும் இருந்தார். முகுல் ராயை வரவேற்ற மம்தா, ''மீண்டும் வீட்டுக்குத் திரும்பி விட்டீர்கள். பிறரைப் போல (சுவெந்து அதிகாரி) நீங்கள் துரோகியாக இருக்கவில்லை. தேர்தலில் திரிணமூலை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததைத் தவிர்த்து எதையும் தவறாகச் செய்யவில்லை'' என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முகுல் ராய், ''பாஜகவுக்குச் சென்ற பிறகு, தற்போது மீண்டும் என்னுடைய பழைய சகாக்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னால் பாஜகவில் இருக்க முடியாது. மம்தா பானர்ஜியுடன் எப்போதுமே எனக்கு எந்த முரண்பாடும் இருந்ததில்லை. அவர் வங்கம் மற்றும் இந்தியாவின் ஒரே தலைவர்'' என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து முகுல் ராய், திரிணமூல் பவன் கட்சி அலுவலகத்தில் 2017-ல் தான் இருந்த பழைய அறைக்குச் சென்றார்.
முகுல் ராயின் வருகை குறித்துத் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் கூறும்போது, ''இது வெறும் ஆரம்பம்தான். இன்னும் ஏராளமான தலைவர்கள் பாஜகவில் இருந்து தாய்வீடு திரும்ப உள்ளனர்'' தெரிவித்தனர்.
தேர்தலுக்கு முன்னதாகத் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏராளமான எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பாஜகவுக்குத் தாவிய நிலையில் முதன்முதலில் பாரதிய ஜனதாவில் இணைந்தவர் முகுல் ராய் என்பது குறிப்பிடத்தக்கது.