இந்தியா

ஊரடங்கிலும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு: நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

செய்திப்பிரிவு

பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளபோதும் பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்து வருவதற்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கரோனா பரவல் 2-ம் அலை நிலவுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கரோனா ஊரடங்கால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை குறைந்துள்ளதால் அவற்றின் விலையை, உற்பத்தி செய்யும் நாடுகள் உயர்த்தி வருகின்றன.

இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை விலையை உயர்த்தி வருகின்றன.

மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரோல்- டீசல் விலை உச்சம் தொட்டது. பின்னர் சற்று குறைந்தது. இந்தநிலையில் பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெட்ரால்- டீசல் விலை உயர்வுக்கு அதிகரிப்புக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குஜராத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள், பணியாளர்கள், எம்எல்ஏக்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் அனுமதி பெறாமல் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுளது.

குஜராத் காங்கிரஸ் சார்பில் அகமதாபாத், காந்திநகர், ராஜ்கோட், பரூச், பலன்பூர் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் சக்தி சிங் ஆகியோர் குதிரை வண்டிகளில் ஏறி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்துக்குச் சென்றனர்.

விலை உயர்வு குறித்து வேணுகோபால் கூறும்போது, ''காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் பெட்ரால்- டீசல் மீதான வரி ரூ.9.20 ஆக இருந்தது. ஆனால் இப்போது 32 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. கலால் வரி விதிப்பதை அரசு நிறுத்த வேண்டும். பெட்ரால்- டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT