பாஜகவில் இருந்து முகுல்ராய் தாய்க் கட்சியான திரிணமூல் காங்கிரஸுக்கே திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டும் அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தவர், பாஜகவில் இணைந்தார்.
திரிணமூல் காங்கிரஸிலிருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்த முகுல்ராய்க்கு, பாஜகவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பேசப்படுகிறது. கட்சியின் மாநிலத் தலைவர் திலிப் கோஷ், தேசியச் செயலர் ராகுல் சின்ஹா ஆகியோரைத் தாண்டி முகுல் ராயால் செயல்பட முடியவில்லை என்று கூறப்பட்டது.
இதற்கிடையே மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் அசாத்திய வெற்றிக்குப் பிறகு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்குத் தாவிய பலர், மீண்டும் திரிணமூலுக்கே திரும்ப விரும்புகின்றனர். அவர்களுடன் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முகுல்ராயின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முகுல்ராயை அபிஷேக் பானர்ஜி மருத்துவமனையில் சந்தித்துப் பேசியுள்ளார்.
அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக கூட்டத்திலும் முகுல்ராய் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் அவர், பாஜகவில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கே திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாகத் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏராளமான எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பாஜகவுக்குத் தாவிய நிலையில் முதன்முதலில் பாரதிய ஜனதாவில் இணைந்தவர் முகுல்ராய் என்பது குறிப்பிடத்தக்கது.