முதலீடு இரட்டிப்பாகும் எனக் கூறி சீன செயலி மூலம் 5 லட்சம் இந்தியர்களிடம் ரூ.150 கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 2 பட்டய கணக்காளர் (சிஏ), திபெத் பெண் மற்றும் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலமாக பன்முக சங்கிலித் தொடர் சந்தை மூலம் விரைவாக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி இந்த மோசடிநடத்தப்பட்டுள்ளது. 2 மாதங்களில் ரூ.150 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாத்ஸவா தெரிவித்துள்ளார்.
நிதி பரிவர்த்தனை தொடர்பாகமேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் வங்கிகள் மற்றும் பணப் பரிவர்த்தனை மையங்களில் ரூ.11 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.இதுதவிர குர்கானைச் சேர்ந்த பட்டய கணக்காளரிடமிருந்து ரூ.97 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் போலியாக 110 நிறுவனங்களை உருவாக்கி மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலீடு 24 முதல் 35 நாட்களில் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை காட்டி முதலீடு திரட்டப்பட்டுள்ளது. ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ரூ.300 திரட்டப்பட்டுள்ளது.
பவர்பேங்க் என்ற செயலி மூலம்இந்த பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் 4-வது இடத்தில் இந்த செயலி உள்ளது. இதுதவிர ஈஇஸட்பிளான் என்ற செயலியும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலிகளின் செயல்பாடுகுறித்து துணை கண்காணிப்பாளர் ஆதித்ய கவுதம் தொழில்நுட்பக் குழுவுடன் பரிசீலனை செய்துள்ளார். இதில் ஈஇஸட்பிளான் செயலிக்கு தனியாக இணையதளம்உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பவர்பேங்க் செயலியானது பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயலிக்கான பிரதான சர்வர் சீனாவில் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் பயனாளியின் கேமராவில் பதிவாகும் புகைப்படங்களை பார்ப்பது மற்றும் அவரது தொடர்பு நபர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது மற்றும் போனில் பதிவாகும் விவரங்களை அறிந்து கொள்வதற்கும் அனுமதிக்க வேண்டும். இதற்கு ஒப்புதல் அளிக்கும் நபர்கள் மட்டுமே செயலியை செயல்படுத்த முடியும்.
நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக முதலீட்டாளர்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரையிலான தொகை அளிக்கப்பட்டது. இதனால்பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குறைந்த முதலீடு செய்தவர்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்ததும், அவரது கணக்கு முடக்கப்படும். செயலியை அவர் இயக்க முடியாது. இது தொடர்பாக எங்கும் புகார் செய்ய முடியாது.
நண்பர்கள் அதன் மூலம் உறவினர்கள், வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக பலருக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு முதலீடுகள் திரட்டப்பட்டுள்ளன.-பிடிஐ