இந்தியா

கரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை முறியடிக்க நாடு முழுவதும் பிரச்சாரம்: மத்திய அமைச்சர் நக்வி தகவல்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை முறியடிக்க நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்த ஆய்வு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமை தாங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் முடிவடைந்துள்ளன. எனினும், கரோனா தொற்று காரணமாக ஹஜ் யாத்திரை விவகாரத்தில் சவுதி அரசு எடுக்கும் முடிவுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக குறுகிய மனப்பான்மை கொண்ட சிலர் தடுப்பூசி குறித்து அச்சத்தையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் நாட்டு மக்களின் சுகாதாரத்துக்கு எதிரானவர்கள் ஆவர். இதுபோன்ற நபர்களிடமிருந்து நம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தடுப்பூசி குறித்த வதந்திகளை முறியடிக்க நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். மாநில ஹஜ் கமிட்டிகள், வக்ப் வாரியங்கள், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மற்றும் இதர சமூக மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கும். சுயஉதவி குழுக்களைச் சேர்ந்தவர்களும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.-பிடிஐ

SCROLL FOR NEXT