இந்தியா

ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் முதியோருக்கு கரோனா தடுப்பூசி: ஆந்திர மாநில அரசு அறிவிப்பு

என். மகேஷ்குமார்

ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று பரவல், தடுப்பூசி பணிகள், கருப்பு பூஞ்சை பாதிப்பு மற்றும் கரோனா 3-வது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆந்திர அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா 3-வது அலை வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். 26,325 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை புதிதாக நியமனம் செய்ததன் மூலம் 3-வது அலையையும் திறமையாக எதிர்கொள்வோம். தற்போது வரை ஆந்திர மாநிலத்தில் 1,955 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். 1,300 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா 3-வது அலையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப் படுவார்கள் என்பது இன்னமும் ஊர்ஜிதம் ஆகாத நிலையிலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதியோருக்கு ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் கரோனா தடுப்பூசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு பதில் மனுவில் ஆந்திர அரசு கூறியுள்ளது.

SCROLL FOR NEXT