இந்தியா

பாஜகவுக்கு தாவியவுடன் காங்கிரஸ் கொள்கை தவறாகி விட்டதா? -ஜிதின் பிரசாதாவுக்கு கார்கே சரமாரி கேள்வி

செய்திப்பிரிவு

ஜிதின் பிரசாதா பாஜகவுக்கு தாவியவுடன் ஒரே நாளில் காங்கிரஸ் கொள்கைகள் அவருக்கு தவறாக தெரிவது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜிதின் பிரசாதா ஜிதின் பிரசாதா நேற்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு பியுஷ் கோயல் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவையும் ஜிதின் பிரசாதா சந்தித்தார்.

பின்னர் ஜிதின் பிரசாதா செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘காங்கிரஸுடன் எனக்கு மூன்று தலைமுறை தொடர்பு உள்ளது. பல்வேறு ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். அமைப்பு ரீதியாக செயல்படும் ஒரே கட்சியாக பாஜக உள்ளது. தேசிய கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது.

காங்கிரசில் பணியாற்றும் போது மக்களுக்காக உழைக்க முடியவில்லை. ஒரே குடும்பத்தினரால் இயக்கப்படும் கட்சியாக பாஜக இல்லை. எனது அரசியல் வாழ்க்கையில் இன்று முதல் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது’’ எனக் கூறினார்.


இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஜிதின் பிரசாதாவுக்கு இன்று பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஜிதின் பிரசாதா பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் மட்டுமின்றி அவர் தந்தையும் காங்கிரஸ் கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர்.

ஜிதின் பிரசாதாவை காங்கிரஸ் கட்சி மரியாதையுடன் நடத்தியது. அவர் கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கினோம். மேற்குவங்க மாநில பொறுப்பாளராக அறிவித்தோம். ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கினோம். காங்கிரஸ் பதவியில் இருந்தபோது அவரும் அமைச்சராக இருந்தார்.

ஆனால் இப்போது பாஜகவுக்கு சென்று விட்டார். அங்கு சென்றவுடன் காங்கிரஸ் கொள்கைகளை விமர்சிக்கிறா். ஒரே நாளில் காங்கிரஸ் கொள்கைகள் அவருக்கு தவறாக தெரிவது ஏன்? இத்தனை ஆண்டுகள் கட்சியில் இருந்தபோது அவருக்கு கொள்கை உயர்வாக தெரிந்தது ஏன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT