கடந்த 2019-20 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டிய அரசியல் கட்சிகளில் பாஜக ரூ.276 கோடியுடன் முதலிடம் பிடித்தது.
கடந்த 2019-20 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றநன்கொடை விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ரூ.276.45 கோடியை வாரி வழங்கிஉள்ளன. இதில் ரூ.217.75 கோடியை பார்தி ஏர்டெல் குழுமத்தின் புருடென்ட் அறக்கட்டளை மட்டுமே வழங்கி உள்ளது. ஜன்கல்யாண் அறக்கட்டளை ரூ.45.95 கோடியும், ஏ.பி.ஜெனரல் அறக்கட்டளை ரூ.9 கோடியும், சமாஜ் அறக்கட்டளை ரூ.3.75 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கி உள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.58 கோடி மட்டுமே தேர்தல் நிதி கிடைத்தது. இதில் புருடென்ட் ரூ.31 கோடி, ஜன்கல்யாண் ரூ.25 கோடி, சமாஜ் அறக்கட்டளை ரூ.2 கோடி வழங்கி உள்ளன. இது தவிர வேறு வழியிலும் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உள்ள 35 மாநில கட்சிகள் நன்கொடை பெற்ற விவரங்களை தாக்கல் செய்துள்ளன. இதில் தேர்தல் பத்திரங்கள் மட்டுமல்லாது பிற வகையில் கிடைத்தநிதியும் அடங்கும். இதன்படி, தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி அதிக அளவாகரூ.130.46 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா ரூ.111.4 கோடி, ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.92.7 கோடி, தமிழகத்தில் அதிமுக ரூ.89.6கோடி, திமுக ரூ.64.9 கோடி நன்கொடை திரட்டின.- பிடிஐ