இந்தியா

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மாட்டோம்; விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கரோனா பரவல் சூழலிலும் அவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு சார்பில் 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும், இதில் சுமுகத் தீர்வு ஏதும் காணப்படவில்லை. இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இடைத்தரகர்களை பார்த்து பயம் இல்லை. விவசாயிகளின் நலன் மட்டுமே அரசுக்கு பெரிதாக இருந்தது. எனவேதான், விவசாயிகளுக்கு மாபெரும் நன்மை பயக்கும் வரலாற்று சிறப்புமிக்க மூன்று புதிய வேளாண் சட்டங்களை அரசு இயற்றியது. இந்த சட்டங்களால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலனடைந்து வந்தனர். அந்த சமயத்தில் தான், விவசாயிகளின் போராட்டம் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் மற்றும் இடைத்தரகர்கள் பரப்பிய பொய்ப் பிரச்சாரங்களை நம்பி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளுடன் நடந்த ஒவ்வொரு பேச்சுவார்த்தை யின்போதும், இந்த சட்டங்களில் உள்ள குறைகளையும், தவறுகளையும் சுட்டிக் காட்டுமாறு அரசு கூறியது. ஆனால், ஒருவர் கூட எந்தவொரு தவறையும் சுட்டிக்காட்டவில்லை. மாறாக, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று மட்டுமே அவர்கள் வலியுறுத்தினர். தவறே இல்லாத சட்டங்களை எதற்காக அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் கேள்வி.

இப்போதும் கூட, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவே அரசு விரும்புகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். அதே சமயத்தில், சட்டங்களில் இருக்கும் தவறுகளை அவர்கள் கூற வேண்டும். அப்போதுதான், அந்த சட்டங்களை திருத்தியமைக்க முடியும். இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறினார்.

SCROLL FOR NEXT