நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி நீதிமன்றத்தை சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை, இதில் அரசியல் பழிவாங்குதல் எதுவும் இல்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியதைக் கண்டித்த அருண் ஜேட்லி, “இதில் அரசியல் பழிவாங்குதல் எதுவும் இல்லை. தனிப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் அரசுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. உயர் நீதிமன்றம் சோனியா, ராகுல் மனுக்களை தள்ளுபடி செய்து விட்டது. இவர்கள் விசாரணையை சந்தித்தேயாக வேண்டும். இந்த நாட்டில் சட்டத்திலிருந்து ஒருவரும் பாதுகாப்பு கோர முடியாது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் அல்லது வழக்கைச் சந்தித்துதான் ஆகவேண்டும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.
வழக்கு விவரம்:
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கையகப்படுத்தி, அதன் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, பொருளாளர் மோதி லால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மற்றும் சுமன் துபே ஆகியோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2014 ஜூன் 26-ல், விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியது. அப்போது, உயர் நீதி மன்றத்தை அணுகி சோனியா, ராகுல் உள்ளிட்டோர் சம்மனுக்கு இடைக்காலத் தடை பெற்றிருந்தனர். சோனியா, ராகுல் மனுக்களின் மீதான விசாரணை முடியும் வரை இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டது.
தற்போது, சோனியா ராகுல் ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், நேரில் ஆஜராக விலக்கு கோரும் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இடைக் காலத் தடையை நீட்டிக்கவும் மறுத்துள்ளதால் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.