மும்பையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நகரின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் புறநகர் ரயில் சேவை, வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 3-ம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் பல இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
மும்பையில் ஜூன் 10- ம் தேதி பருவமழை தொடங்கும் என வானிலை மையம் கணித்திருந்தநிலையில் ஒருநாள் முன்னதாகவே மழை தொடங்கியுள்ளது. காலை 8 மணி வரையில் மும்பை கொலபா பகுதியில் 8 செமீ மழையும், சாந்தாகுரூஸ் பகுதியில் 6செமீ மழையும் பதிவாகியுள்ளது
மும்பை நகரத்தின் பல பகுதிகள் வெள்ளநீரினால் சூழப்பட்டுள்ளது. முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. வாகனங்கள் மிதந்து செல்கின்றன. மட்டுங்கா, கிங்ஸ் சர்க்கில் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. மும்பையில் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடிந்த பின்னர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.