இந்தியா

கரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதியம்: மத்திய அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மத்தியப் பணியாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா காரணமாக உயிரிழந்த அரசு ஊழியர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர், குடும்ப ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள், குடும்ப ஓய்வூதியம் வழங்கும் பணி தொடங்குவதை உறுதி செய்ய அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், மத்திய கணக்கு தலைமை கட்டுப்பாட்டாளர், ஒய்வூதியம் வழங்கும் வங்கிகளின் தலைமை நிர்வாக இயக்குனர்கள் ஆகியோருக்கு மத்திய பணியாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒய்வூதிம் மற்றும் ஒய்வூதியதாரர்கள் நலத்துறை பிறப்பித்த முக்கியமான உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மத்தியப் பணியாளர் துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

பணியில் இருக்கும் அரசு ஊழியர் இறந்தால், இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு, குடும்ப ஓய்வூதியம் கோரும்போது, ஒரு மாதத்குள் குடும்ப ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கும்படி அனைத்து துறை செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு அமைச்சகம் மற்றும் துறைகளில் தனி அதிகாரிகளை, செயலாளர்கள் நியமித்து, அவர்களின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் துறையின் இணையளத்தில் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், குடும்ப உறுப்பினர்கள் அந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும். குடும்ப ஓய்வூதிய கோரிக்கைகளின் மாதாந்திர நிலவரத்தை ஒவ்வொரு அமைச்சகம்/துறைகள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலன் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

கரோனா தொற்றால் ஏற்படும் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார். அந்த உணர்வு மற்றும் கவலையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு உதவுவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் உள்ளது.

இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

SCROLL FOR NEXT