இந்தியா

தனியார் மருத்துவமனையில் சோதனைக்காக ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் 22 பேர் உயிரிழப்பா?- விசாரணைக்கு உத்தரவிட்டது உத்தரபிரதேச அரசு

செய்திப்பிரிவு

தனியார் மருத்துவமனையில் சோதனை அடிப்படையில் சிறிதுநேரம் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் 22 நோயாளிகள் உயிரிழந்ததாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் கரோனா 2-வது பரவல்தீவிரமடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை உரிமையாளர் அரிஞ்சய் ஜெயின், கடந்த ஏப்ரல் 28-ம் தேதி பேசிய குரல் பதிவு வெளியாகி உள்ளது. 1.5 நிமிடம் ஓடும் அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும்தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே,மருத்துவ ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வரும் நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து அழைத்துச்செல்லுமாறு அவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்தோம். சிலர் இதை ஏற்றுக் கொண்டனர். ஆனால் பலர் மருத்துவமனையிலிருந்து வெளியேற மறுத்தனர்.

இதையடுத்து, மருத்துவ ஆக்சிஜன் தீர்ந்துவிட்டால் யாரெல்லாம் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஒரு சோதனை நடத்தப்போவதாகக் கூறினேன். இதன்படி காலை 7 மணிக்கு (ஏப்ரல் 27) நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தினோம். அப்போது 22 நோயாளிகளின் உடல் நீல நிறமாக மாறியது. இவர்களுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்காவிட்டால் உயிரிழந்து விடுவார்கள் என்று தெரிந்து கொண்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த குரல் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த 22 நோயாளிகளும் உயிரிழந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆக்ரா மாவட்ட ஆட்சியர் பிரபு என்.சிங் வெளியிட்ட அறிக்கையில், “இந்த தனியார்மருத்துவமனையில் ஏப்ரல் 26, 27தேதிகளில் 7 நோயாளிகள் உயிரிழந்தனர். ஆனால் மருத்துவமனையின் உரிமையாளரின் குரல் பதிவான நாளில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. 22 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறுவதில் உண்மையில்லை. எனினும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என கூறப் பட்டுள்ளது.

இதுகுறித்து அரிஞ்சய் ஜெயின் கூறும்போது, “ஆக்சிஜன் யாருக்கெல்லாம் அவசியம் தேவைப்படுகிறது, தீர்ந்துவிட்டால் நிலைமையை எப்படி சமாளிப்பது என்பதற்காகத்தான் சோதனை நடத்தினோம். ஆனால் 22 நோயாளிகள் இறந்துவிட்டதாக தவறான தகவலை பரப்புகின்றனர்” என்றார்.

SCROLL FOR NEXT