கர்நாடகாவில் நடிகர் ஷாருக் கானின் “தில்வாலே” திரைப் படத்தை திரையிட இடையூறு செய்த இந்துத்துவா அமைப்பினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் மங்களூரு பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த, பஜ்ரங் தளம் அமைப்பின் நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் நடிகர் ஷாருக் கான் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக கூறியதற்கு, இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஷாருக் கானின் 'தில்வாலே' திரைப்படத்தை கண்டித்து போர்க்கொடி தூக்கின. கர்நாடக மாநிலம் மங்களூருவில் அந்த திரைப்படத்தை திரையிட விடாமல் விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் தடுத்தனர்.
இந்நிலையில் மங்களூருவை சேர்ந்த பெண்ணிய செயற் பாட்டாளர் வித்யா டிங்கர், ''பஜ்ரங் தளம் அமைப்பினர் பாசிசிஸ்டுகளைப் போல செயல்பட்டு, தில்வாலே திரைப் படத்தை நிறுத்தியுள்ளனர். பிரிவினையைத் தூண்டும் இந்துத்துவா அமைப்பினர் மீது கர்நாடக அரசும் போலீஸாரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்''என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு மங்களூரு பஜ்ரங் தளம் பொறுப்பாளர் ஷர்வன் பம்ப்வெல், மற்றொரு நிர்வாகி புனித் கோத்தாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வித்யா டிங்கருக்கு எதிராக தங்களது ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டனர். புனித் கோத்தாரி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வித்யா டிங்கரை பலாத்காரம் செய்யப் போவதாக பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து வித்யா டிங்கர் மங்களூரு வடக்கு காவல் நிலையத்தில் ஷர்வன் பம்ப்வெல், புனித் கோத்தாரி உட்பட 20 பேர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, நேற்றுமுன் தினம் புனித் கோத்தாரியை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் தலை மறைவாக இருப்பதால், அவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக இந்துத்துவா அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக மங்களூருவை சுற்றியுள்ள பகுதிகளில் தில்வாலே திரைப்படம் நிறுத்தப்பட்டிருந்தது. மங்களூரு மாநகர காவல் ஆணையர் முருகன் திரையரங்க உரிமையாளர் மற்றும் இந்துத்துவா அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, திரைப்படத்தை திரையிட ஏற்பாடு செய்தார். இதையடுத்து நேற்று முன் தினம் சிட்டி சென்டர் திரையரங்கத்தில் தில்வாலே திரையிட்ட போது பஜ்ரங் தளம் அமைப்பினர் திரையரங்கை முற்றுகையிட்டனர்.
அப்போது ஷாருக் கானுக்கு எதிராகவும், திரையரங்க நிர்வாகத்துக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த அமைப்பை சேர்ந்த ராகேஷ் கோத்தாரி (23), பிரஷாந்த் பூஜாரி (24), சந்திரசேகர் கோபால கவுடா (22), ராஜப்ப கவுடா (27) உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு இந்துத்துவா அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.