கடந்த 2020-21-ம் நிதியாண்டில் லோக்பால் அமைப்பிடம் 4 எம்.பி.க்கள் உட்பட 110 பேர் மீது ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால் சட்டம் இயற்றப்பட்டது. பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு உயர் பதவியில் இருப்போர் மீதானஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிப்பதற்காக லோக் ஆயுக்தா அமைப்பையும் ஏற்படுத்துவதற்கான சட்டம் இதுவாகும்.
லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுபவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ இருக்கவேண்டும். லோக்பால் ஆணையத்தில் 8 உறுப்பினர்கள் வரை இடம்பெறலாம். அதில் 4 உறுப்பினர்கள் நீதித் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டில் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.சி. கோஷ் நியமிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து லோக்பால் அமைப்பிடம் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கடந்த 2020-21-ம்ஆண்டில் மட்டும் லோக்பால் அமைப்பிடம் 4 எம்.பி.க்கள் உட்பட110 பேர் மீது புகார்கள் வந்துள்ளன என்று லோக்பால் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. 2019-20-ம் ஆண்டில் மொத்தம் 1,427 புகார்கள் வந்தன.
2020-21-ம் ஆண்டில் வந்த புகார்களில் 57 புகார்கள் குரூப்-ஏ அல்லது குரூப் -பி அதிகாரிகள் மீதானவை. 44 புகார்கள் பல்வேறு வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மீதானவை. மீதமுள்ள புகார்கள் இதர பிரிவினர் மீது வந்துள்ளன.
இதில் 30 புகார்கள் மீது முதற்கட்ட விசாரணைக்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளது. மேலும்75 புகார்கள் மீது முதல்கட்ட விசாரணை நடந்து முடிந்துள்ளது. இதில் 13 புகார்கள் தொடர்பான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ, பி அதிகாரிகள் மீதான14 புகார்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு (சிவிசி) அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 3 புகார்கள் சிபிஐ விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கு மீது டெல்லி மேம்பாட்டு ஆணையத்திடம் (டிடிஏ) நிலுவையில் உள்ளதாகவும் அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. - பிடிஐ