ஆன்டிகுவா போலீஸார் தன்னை கருணையின்றி தாக்கினர் என்று மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,5000 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிய மெகுல் சோக்சி, 2018-ல் ஆன்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்தார். அவரை இந்தியா அழைத்து வர சிபிஐ, அமலாக்கத் துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மே 23-ம் தேதி மெகுல் சோக்சி காணாமல் போனதாக ஆன்டிகுவா போலீஸார் கூறினர். அவரைத் தேடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் டொமினிக்கன் தீவில் கியூபாவுக்கு தப்ப முயன்றபோது தனது காதலியுடன் பிடிபட்டார் என அத் தீவின் பிரதமர் கூறினார்.
ஆனால் இதுகுறித்து மெகுல் சோக்சி தரப்பு கூறியபோது பல்வேறு முரணான தகவல்கள் வெளியாயின. மெகுல் சோக்சி கடத்தப்பட்டதாகவும், அவருடன் பயணித்த காதலி எனக் கூறப்பட்ட பெண் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்றும் கூறினர்.
இதுகுறித்து ஆன்டிகுவா போலீசாரிடம் மெகுல் சோக்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பார்பரா ஜபாரிகா என்ற பெண்ணுடன் நட்புடன் பழகி வருகிறேன். கடந்த மே 23-ம் தேதி அவரைச் சந்திக்க சென்றபோது திடீரென்று 8 முதல் 10 பேர் வந்து என்னை கடுமையாகத் தாக்கினர். அந்த பெண் என்னைக் காப்பாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. உதவிக்கும் யாரையும் அழைக்கவில்லை. என்னை தாக்கியவர்கள் என்னிடமிருந்து மொபைல், பர்ஸ் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டனர். ஆனால் அவர்கள் என்னிடம் கொள்ளையடிக்க வரவில்லை. கடுமையாகத் தாக்கப்பட்டதில் நான் மயக்கமடைந்து விட்டேன். அந்த பெண் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று பின்னரே புரிந்தது. அனைத்தும் கடத்தலுக்கான திட்டம் என்றும். மேலும் என்னை தாக்கியவர்கள் ஆன்டிகுவா போலீஸார்தான் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் சோக்சியின் நெருங்கிய நண்பர் கோவின் சோக்சி, கியூபா தப்பிச் செல்ல முயன்ற திட்டம் உண்மை என்றும் ஆன்டிகுவா போலீஸ் அவரை இந்தியா அனுப்புவதற்கான முயற்சிகளில் இருப்பதால் இந்த கடத்தல் நாடகத்தை நடத்தியிருக்கிறார் என்று கூறி யுள்ளார்.