எனது உறவினர்களை யாரையும் மேற்கு வங்க ஆளுநர் மாளிகை சிறப்புப் பணியில் நியமிக்கவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யின் புகாருக்கு ஆளுநர் ஜகதீப் தன்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்து கடந்த மே மாதம் 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாயின. தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் மம்தாதலைமையிலான அரசு அமைந்துள்ளது. அதன்பின்னர் மாநிலத்தில் வன்முறைகளை திரிணமூல் காங்கிரஸார் கட்டவிழ்த்து விட்டதாக பாஜக புகார் கூறி வருகிறது.
மேலும் அண்மையில் புயல் நிவாரணத்தை பார்வையிட சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சுமார் அரை மணி நேரம் காக்க வைத்துவிட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் சிறப்பு பணி அதிகாரிகள் (ஓஎஸ்டி) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் ஆளுநரின் நெருங்கிய உறவுக்காரர்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் மஹுவா மொய்த்ரா கூறும்போது, "ஆளுநர் மாளிகை பணியில் இணைந்த சிறப்பு அதிகாரிகள் அபுதாய் சிங் ஷெகாவத், அகில் சவுத்ரி, ருச்சி துபே, பிரசாந்த் தீட்சித், எஸ்.வாலிகர், கிஷண் தன்கர் ஆகிய 6 பேரும் ஆளுநர் ஜகதீப் தன்கரின் உறவினர்கள்தான். ஆளுநரின் உத்தரவின் பேரிலேயே இது நடந்துள்ளது” என்றார். இது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஆளுநர் ஜகதீப் தன்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஜகதீப் தன்கர் கூறும்போது, “திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் குற்றச்சாட்டின்படி, ஆளுநர் மாளிகையில் பணியில் அமர்ந்த 6 பேர் எனது உறவினர்கள் என்பது தவறான செய்தியாகும். ஆளுநர் மாளிகையில் இணைந்தசிறப்பு பணி அதிகாரிகள் 3 பேர் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் 4 பேர் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். யாருமே எனது குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கிடையாது. ஏனெனில், 4 பேர் எனது ஜாதியினர் கூட கிடையாது.
திரிணமூல் எம்.பி.யின் குற்றச் சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மக்கள் பேசக்கூடாது என்பதற் காகவும், அவர்களை திசை திருப்புவதற்காகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இவ்வாறு குற்றச் சாட்டுகளை சுமத்தியுள்ளது. இது திசை திருப்பும் அரசியல் தவிர வேறெதுவும் இல்லை. இது முழுக்க மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல்தான்” என்று தெரிவித்தார். - பிடிஐ