இந்தியா

நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களைச் சொல்ல முடியாத துன்பத்தில் தள்ளியிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், உயிரிழக்கின்றனர். இந்த கரோனா 2-வது அலையிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் லாக்டவுனை அமல்படுத்தின. இந்த பாதிப்பு எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

நாடு முழுவதும் ஏப்ரல் - மே மாதங்களில் உச்சமடைந்த கரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது சீராக குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் அதேசமயம் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் தொலைகாட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே மாநில முதல்வர்களுடன் கோவிட் தடுப்பு பணிகள் குறித்தும் தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக தெரிகிறது.

இதுமட்டுமின்றி கோவிட் முதல் அலை பாதிப்பின்போது ரூ.20 லட்சம் கோடிக்கான சுயசார்பு திட்டத்தை பிரதமர் அறிவித்திருந்தார். 2-வது அலை ஏற்பட்டதற்கு பிறகு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதத்தில் அதுதொடர்பான சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT