கரோனா தொற்றை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசியில் கூடுதலாக ஆன்டிபாடி என்பபடும் நோய் எதிர்ப்புத் தன்மை உருவாகுவதாக முதல்கட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களைச் சொல்ல முடியாத துன்பத்தில் தள்ளியிருக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது 23 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கோவிஷீல்ட்டில் கூடுதலான ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு தன்மையை உருவாக்குவதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது..
முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் தாக்கம் தொடர்பாக அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் 13 மாநிலங்களைச் சேர்ந்த 515 சுகாதாரப் பணியாளர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. இவர்களில் 425 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 90 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டிருந்தது. இவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்தப்பட்ட 21 முதல் 36 நாட்களுக்கு பிறகு 95 சதவீத நபர்களுக்கு சிறப்பான நோய் எதிர்ப்பு திறனை அளித்திருக்கிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி 98 சதவீதமும், கோவாக்சின் தடுப்பூசி 80 சதவீதமும் செரோபாசிடிவிட்டி கண்டறியப்பட்டிருப்பது. ஆன்டிபாடி ஸ்பைக் டிட்ரே அளவானது கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 115 AU/ml-ம், கோவாக்சின் போட்டுக் கொண்டவர்களில் 51 AU/ml-ம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இரண்டுமே மிதமான தொற்று ஏற்பட்டுள்ளதுடன், கரோனாவால் எந்த இறப்பும் பதிவு செய்யப்படவில்லை.
ஆனால் இந்த ஒப்பீடு என்பது முதல்கட்ட நிலை என்பதால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனை மருத்துவத்துறையினர் ஒரு வழிகாட்டலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது ஒரு ஆய்வு மட்டுமே இதனை வைத்துக் கொண்டு முழுமையான முடிவுகள் வந்ததாக எண்ணிக் கொள்ள முடியாது என்றும் அந்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
ஆய்வானது எந்த தடுப்பூசி சிறப்பானது என்பதை தீர்மானிப்பதற்காக அல்ல என்றும் இரண்டு தடுப்பூசி செயல்பாடுகளின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வு மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.