இந்தியா

விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்; சிகிச்சைக்காக இந்தியாவிலிருந்து வெளியேறினேன்: டொமினிக்கன் நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி வாக்குமூலம்

செய்திப்பிரிவு

மருத்துவ சிகிச்சைக்காகவே இந்தியாவில் இருந்து வெளியேறியதாகவும் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி மெகுல்சோக்சி மீது புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக 2013-ம் ஆண்டுஇந்தியாவில் இருந்து அவர் தலைமறைவானார். அவர் ஆன்டிகுவா தீவில் தஞ்சமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில், ஆன்டிகுவா தீவில் இருந்து மெகுல் சோக்சி கடந்த 23-ம் தேதி திடீரென மாயமானார். அதன் பின்னர், டொமினிக்கன் தீவு போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதனிடையே, சோக்சியின் வழக்கறிஞர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த டொமினிக்கன் உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. மேலும் டொமினிக்கன் தீவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பான விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில். ஜாமீன் கோரிமெகுல் சோக்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின் நகல் தற்போது இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அதில் மெகுல் சோக்சி கூறியிருப்பதாவது:

இந்தியாவில் நான் இருந்த வரையில், எனக்கு எதிராக எந்த புலனாய்வு அமைப்பும் வாரண்ட் பிறப்பிக்கவில்லை. எனதுமருத்துவ சிகிச்சைக்காகவேநாட்டைவிட்டு வெளியேறினேன். மற்றபடி, இந்திய அதிகாரிகளின் விசாரணையை தவிர்க்க வேண்டும்என்ற எண்ணம் எனக்கு துளியும் கிடையாது. இப்போதுகூட, விசாரணைக்கு தயாராக உள்ளேன்.

அதேபோல், ஆன்டிகுவா தீவில்இருந்தபோது, எனக்கு எதிராகஇந்திய புலனாய்வு அமைப்புகள் தொடுத்த அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகி உள்ளேன். எனவே, எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்த தயாராக உள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT