இந்தியா

தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் 91 பல்கலை.களில் என்சிசி விருப்ப பாடமாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

தேசியக் கல்விக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள 91 பல்கலைக்கழகங்கள் என்சிசியை (தேசிய மாணவர் படை) விருப்பப் பாடமாக ஏற்றுக் கொண்டுள்ளன.

பள்ளி மாணவர்களின் மனதில் தேசப்பற்றை விதைப்பதற்காக வும், ஒழுக்கத்தை வளர்த்தெடுக் கும் நோக்கிலும் 1948-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி உருவாக்கப்பட்டது தேசிய மாணவர் படை. இதில் இணைந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காவல் துறைமற்றும் ராணுவ வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் என்சிசியில் இணைவதற்கு ஏராளமான மாணவர்கள் முன்வருகின்றனர். முதன்முதலில் 20,000 பேருடன் தொடங்கப்பட்ட இந்தப் படைப் பிரிவில் தற்போது 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

எனினும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டுகளை போல என்சிசியும் துணை சார் பாடப் பிரிவுகளில்தான் (எக்ஸ்ட்ரா கரிகுலர்) இடம்பெற்று வந்தது. பொதுவாக, துணை சார் பாடப் பிரிவுகளில் இடம்பெறும் பாடங்களுக்கும், மாணவர்களின் மதிப்பெண் சதவீதத்திற்கும் தொடர்பு இருக்காது. அதே சமயத்தில், விருப்பப் பாடப் பிரிவில் (எலக்டிவ் கோர்ஸ்) உள்ள பாடங்கள், மதிப்பெண் சதவீதத்தில் கூடுதல் புள்ளிகளை சேர்க்கும். இது, மாணவர்களின் வேலைவாய்ப்பில் பெரும் பங்களிப்பை வழங்கும்.

எனவே, என்சிசியையும் விருப்பப் பாடப் பிரிவில் சேர்க்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதனைக் கருத்தில்கொண்டு, புதிய கல்விக் கொள்கையில் உயர்கல்விக்கான 'விருப்ப பாடப் பிரிவு' முறையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தன. மேலும், என்சிசியை அதிக அளவிலான மாணவர்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், என்சிசியை துணைசார் பாடப் பிரிவில் இருந்து நீக்கி விருப்பப் பாடப்பிரிவில் சேர்க்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) சார்பில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.

இதை ஏற்று 91 பல்கலைக் கழங்கள் என்சிசியை விருப்ப பாடப்பிரிவில் சேர்க்க ஒப்புக் கொண்டுள்ளன. அதிகபட்சமாக தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் மாநிலங்களைச் சேர்ந்த 42 பல்கலை.களும், காஷ்மீரில் உள்ள 23 பல்கலை.களும் அடங்கும்.

இந்தப் பல்கலை.களில் இனிவழங்கப்படும் என்சிசி சான்றிதழ்கள் (பி மற்றும் சி), மாணவர்களின் 6 செமஸ்டர் தேர்வுகளில் மொத்தம் 24 புள்ளி களை கூடுதலாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

SCROLL FOR NEXT