பீட்சா, பர்கர், ஸ்மார்ட் போன்கள் மற்றும் துணிகள் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் போது ரேஷன் பொருட்களை ஏன் வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு மாநில அரசுகளுடன் மோதல் போக்கை தொடர்ந்து கையாண்டு வருகிறது. மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, டில்லி, ஜார்க்கண்ட் அரசுகளை செயல்படவிடாமல் தடுக்கிறது. டெல்லியில் போராடும் விவசாயிகள், லட்சத்தீவு மக்களுடனும் மத்திய அரசு சண்டையிடுகிறது.
நாடுமுழுவதும் கரோனா தொற்று உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்யும் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். மத்திய அரசுடன் முரண்பட வேண்டாம் என்றே 5 முறை மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.
வீடுகளில் ரேஷன் பொருட்களை வழங்கும் டெல்லி அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது ஏன். தேசிய நலன் கருதி இந்த திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்க வேண்டும். கோவிட் காலத்தில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தொற்று பரவும் மையமாக ரேசன் கடைகள் மாறிவிடும். பீட்சா, பர்கர், ஸ்மார்ட் போன்கள் மற்றும் துணிகள் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் போது ரேஷன் பொருட்களை ஏன் வழங்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.