தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்புதல் மற்றும் சொத்துக்களை முடக்குவது தொடர்பாக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஊழலை எதிர்த்து போராடுவதில் உள்ள சவால்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் பொது சபையின் சிறப்பு கூட்டத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசினார். இத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்புதல் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக வலுவான மற்றும் ஒற்றுமை மிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்று கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்து பல்வேறு தேசங்களின் அதிகார வரம்புகளில் உள்ள சிக்கலான சட்ட அமைப்புகளில் ஒளிந்து கொண்டு, இதிலுள்ள சர்வதேச ஒத்துழைப்பின் பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் அரசியல் பிரகடணத்தை சார்ந்து இந்த சவாலை சரியான பாதையில் எடுத்து சென்று, முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வரும் நாடுகளுக்கு இந்தியாவின் பாராட்டை அமைச்சர் தெரிவித்தார்.
ஊழலை இந்தியா சிறிதும் பொறுத்துக் கொள்ளாதென்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் சார்புத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து பிரதமர் வழங்கிய ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை’ எனும் செயல்முறையை குறிப்பிட்டார்.
குறிப்பாக தற்போதைய நெருக்கடி காலத்தில் ஊழலை கட்டுப்படுத்துவதற்கான உறுதி வேண்டும் என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஊழலுக்கு எதிரான கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்துவதில் இதர நாடுகள், சமூக அமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது என்றும் தமது உரையை நிறைவு செய்யும் போது தெரிவித்தார்.