காஷ்மீரைச் சேர்ந்த 124 வயது மூதாட்டி கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இதனால் இவர் உலகின் வயதான பெண்மணியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த 2-ம் தேதி மொத்தம் 9,289 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பாரமுல்லா மாவட்டம் வகூரா நகரைச் சேர்ந்த 124 வயதான மூதாட்டி ரெஹ்டீ பேகம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை (டிஐபிஆர்) ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டுதான் ஆதாரம்
ட்விட்டரில் மூதாட்டியின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இவரது வயதுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என் றும் ரேஷன் கார்டில் 124 வயது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போது ஜப்பானைச் சேர்ந்த 118 வயதான கான் தனகா என்பவர்தான் உலகின் வயதான பெண் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் அரசு தெரிவித்துள்ள இந்த தகவல் உண்மையாக இருந்தால், உலகின் வயதான பெண்மணி என்ற பெருமை ரெஹ்டீ பேகத்துக்கு கிடைக்கும்.
இதுவரை பிரான்ஸ் நாட்டின் ஆர்லஸ் நகரைச் சேர்ந்த ஜென்னி லூயிஸ் என்ற பெண் நீண்ட நாள் உயிருடன் இருந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார். இவர் தனது 122-வது வயதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ