எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்க இ-100 திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். இதன்படி மகாராஷ்டிராவின் புனே நகரில் மூன்று இ-100 எத்தனால் நிலையங்களை காணொலி வாயிலாக அவர் திறந்து வைத்தார். படம்: பிடிஐ 
இந்தியா

2025-ம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி உறுதி

செய்திப்பிரிவு

வரும் 2025-ம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் சேர்க்கப்படும். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். விவசாயிகளின் வருவாய் பெருகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச் சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய சுற்றுச்சூழல், பெட்ரோலிய துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பிரதமர்மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது, பெட்ரோலில் எத்த னாலை கலப்பது தொடர்பான நிபுணர்களின் திட்ட அறிக்கையை பிரதமர் வெளியிட்டார். மேலும் நாடு முழுவதும் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்க இ-100 என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

21-ம் நூற்றாண்டில் இந்தியாவில் எத்தனால் பயன்பாடு அதிகரிக்கப்படும். இதன்மூலம் சுற்றுச்சூழல் மேம்படும். விவசாயி களின் வருவாய் பெருகும்.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் பயன்பாட்டை முழுமையாக அமலுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 2025-ம் ஆண்டுக் குள்ளேயே இலக்கை எட்ட முடிவு செய்துள்ளோம்.

கடந்த 2014-ம் ஆண்டில் 1.5 சதவீத எத்தனால், பெட்ரோலுடன் சேர்க்கப்பட்டது. தற்போது 8.5 சதவீதத்தை எட்டியுள்ளோம். வரும் 2025-ம் ஆண்டுக்குள் 20 சதவீதத்தை எட்டுவோம்.

கடந்த 2013-14-ம் ஆண்டில் 38 கோடி லிட்டர் எத்தனாலை கொள்முதல் செய்தோம். இப்போது 320 கோடி லிட்டர் எத்தனாலை கொள்முதல் செய்கிறோம். இதன் மூலம் நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் பெரிதும் பலன் அடைந்து வருகிறார்கள்.

எத்தனால் உற்பத்தியை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் முயற்சியால் சர்வதேச சோலார் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சூரியன், ஓர் உலகம், ஒரே மின் கட்டமைப்பு என்ற கொள்கையுடன் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்படும் முதல் 10 நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெற்றிருக்கிறது.

கடந்த 6 ஆண்டுகளில் சூரிய மின் சக்தி உற்பத்தி 15 மடங்கு அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

காற்று மாசுவைக் கட்டுப்படுத்த நீர்வழிப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாட்டின் 18 நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு 7 விமான நிலையங்களில் மட்டுமே சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்யும் வசதி இருந்தது. இப்போது 50 விமான நிலையங்களில் சூரிய மின் சக்தி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். - பிடிஐ

SCROLL FOR NEXT