இந்தியா

குஜராத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி மீது காலணி வீசியவருக்கு 18 மாத சிறை

செய்திப்பிரிவு

குஜராத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரலில் வழக்கு ஒன்றை நீதிபதி கே.எஸ்.ஜாவேரி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடுத்தடுத்து காலணி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இரு காலணிகளும் அவர் மீது படவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த, ராஜ்கோட் மாவட்டம், பாயாவதர் பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரர் பவானிதாஸ் பாவாஜியை பிடித்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

டீக்கடை சம்பந்தமான தனது வழக்கு ஒன்று நீண்ட காலமாக விசாரணைக்கு வராததால் விரக்தியடைந்து காலணிகளை வீசியதாக பாவாஜி கூறினார். இந்த வழக்கில் அகமதாபாத் நீதிமன்றம் பாவாஜிக்கு நேற்று 18 மாத சிறை தண்டனை விதித்தது. எனினும், பாவாஜியின் ஏழ்மை கருதி அவருக்கு நீதிபதி அபராதம் விதிக்கவில்லை.

SCROLL FOR NEXT