மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரிடம் இருந்து ரூ.200 கோடியை பாஜக நன்கொடையாக பெற்றது என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சரான அசாம் கான் குற்றம்சாட்டியுள்ளார். இதனை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது குறித்து அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறும்போது, "மாட்டிறைச்சி விவகாரத்தை கொண்டு பாஜக அரசியல் செய்துவருகிறது. ஆனால், மாட்டிறைச்சியை அதிக அளவில் ஏற்றுமதியில் பெரும்புள்ளியான ஒருவரிடமிருந்து ரூ.200 கோடியை பாஜக நன்கொடையாக பெற்றுள்ளது.
வாங்கிய பணத்தில் கருப்புப் பணமாக பெறப்பட்டது எவ்வளவு என்பதை அந்தக் கட்சி தெரிவிக்க வேண்டும்.
விலங்குகளை படுகொலை செய்வது குற்றமானால், அது எந்த விலங்கானாலும் குற்றமே. பசுவாக இருந்தாலும் வேறு விலங்காக இருந்தாலும் அனைத்தையும் ஒன்றாக பார்க்க வேண்டும். ஆனால், பாஜக பசுவதைக்கு மட்டுமே குரல் எழுப்புகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை பாஜக மட்டுமே அரசியல் செய்து வருகிறது. இந்த விவகாரத்துக்காக எவ்வளவு பணத்தை பாஜக நன்கொடையாக வசூலித்தது என்பதையும் அக்கட்சி தெரிவிக்க வேண்டும்.
கங்கை எப்போது சுத்தமாகும்
கங்கை நதியை சுத்தப்படுத்துவது குறித்து மத்திய அரசு பேசி மட்டுமே வருகிறது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்து விட்டது. இன்னும் 4 ஆண்டுகள் தான் இருக்கின்றன. அதனால், கங்கையை சுத்தப்படுத்தும் பணி எப்போது முடியும் என்பதை தெரிவிக்க வேண்டும்." என்றார்
முலாயம் சிங்கின் பிறந்தநாள் செலவு எவ்வளவு: பாஜக கேள்வி
அசாம் கானின் குற்றச்சாட்டை பாஜக தரப்பு திட்டவட்டமாக மறுத்தது. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளரான விஜய் பகதூர் பதக் கூறும்போது, "பாஜக மீது தேவையில்லாத ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அசாம்கான் அடுக்குகிறார். முதலில் அவர் சமாஜவாதி தலைவர் முலாயம் சிங்கின் பிறந்த நாள் விழாவுக்கு ஆன செலவு எவ்வளவு என்று தெரிவிக்க வேண்டும். அந்த விழாவுக்கு மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிடமிருந்து பணம் அனுப்பப்பட்டதாக ஏற்கெனவே அசாம் கான் தெரிவித்தார். எனவே பாஜக-வின் கொள்கை குறித்து பேச அவருக்கு உரிமையும் தகுதியும் இல்லை. இந்த நாட்டில் கொள்கை, சித்தாந்தம் அடிப்படையில் செயல்படக் கூடிய ஒரே கட்சி பாஜகதான். " என்றார்.