இந்தியா

பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தின்போது கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகும்

பிடிஐ

பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார். அப்போது கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 5, 6-வது அணுஉலைகள் அமைக்க இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

கடந்த ஜூலையில் ரஷ்யாவின் உபா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடுகளில் பிரதமர் மோடி பங் கேற்றார். 2-வது முறையாக வரும் 23-ம் தேதி இரண்டு நாள் பயண மாக அவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்கிறார். அங்கு அந்த நாட்டு பிரதமர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 5, 6-வது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

கூடங்குளம் அணு மின் நிலை யத்தின் முதல் அணுஉலை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2-வது அணுஉலையில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அதில் மே மாதம் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் 3, 4-வது அணு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 8 ஆண்டுகளுக்குள் அணுஉலைகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோடியின் ரஷ்ய பயணத்தின்போது இதுகுறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

கூடங்குளத்தில் அணுஉலை களை நிர்மாணித்து வரும் ரஷ்ய பொதுத்துறை நிறுவனமான ரோசடாமின் துணை தலைமை செயல் அதிகாரி நிகோலய் கடந்த டிசம்பர் 7-ம் தேதி இந்தியாவுக்கு வந்தார். அப்போது இந்திய அணு சக்தி கழகத் தலைவர் சேகர் பாபுவை சந்தித்துப் பேசிய அவர், கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகளை அமைப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

அப்போதே ஒப்பந்த வரைவு இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் திட்டச் செலவு மட்டுமே நிர்ணயிக் கப்பட வேண்டும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூடங்குளம் தவிர்த்து மகாராஷ்டிராவில் ஜெய்தாபூர், ஆந்திராவில் கோவாடா, குஜராத் தில் மித்திவிர்தி ஆகிய இடங்களில் 6 அணுஉலைகளை மத்திய அரசு அமைத்து வருகிறது.

SCROLL FOR NEXT