டொமினிக்கன் தீவுக்கு மெகுல் சோக்சியுடன் (63) பயணித்த பெண் அவரது காதலி இல்லையென்றும், சோக்சியைக் கடத்த திட்டமிட்ட குழுவைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புள்ள தேடப்படும் குற்றவாளியான மெகுல் சோக்சி 2018-லிருந்து ஆன்டிகுவா தீவில் சிறப்பு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். அவரை இந்தியா அழைத்து வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மே 23-ம் தேதி சோக்சி திடீரென மாயமானார்.
இந்நிலையில் டொமினிக்கன் தீவில் ஒரு பெண்ணுடன் அவர் பிடிபட்டார். மேலும் அவருடன் பயணித்த அந்தப் பெண் அவரது காதலி என தகவல் வெளியானது.
இந்நிலையில் அவர் காணாமல் போன விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டொமினிக்கன் தீவுக்கு அவர் கடத்தப்பட்டார் என்றும், அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார் என்றும் சோக்சிதரப்பு தெரிவித்துள்ளது. சோக்சியுடன் பயணம் செய்த பெண்மணி அவருடைய காதலி இல்லை என்றும் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சோக்சியின் வழக்கறிஞர்கள் கூறும்போது, “ஆன்டிகுவாவில் மெகுல் சோக்சியுடன் நட்பாகப் பேசிப் பழகிய அந்தப் பெண், மே 23-ம் தேதி சந்திக்க அழைத்திருக்கிறார். அவரைச் சந்திக்க சென்ற சோக்சியை கடத்தல்காரர்கள் டொமினிக்கன் தீவுக்கு கடத்தி சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சோக்சியைக் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்” என கூறியுள்ளனர்.
மெகுல் சோக்சியின் கண்கள் சிவந்து வீங்கியும் கையில் காயங்களுடனும் சிறையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாயின. இந்நிலையில் மெகுல் சோக்சி யை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானம் ஒன்றை இந்திய அரசு அனுப்பியது.
சோக்சிக்கு ஜாமீன் மறுப்பு
இதனிடையே மெகுல் சோக்சியின் வழக்கறிஞர் டொமினிகன் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், மெகுல் சோக்சி சட்டவிரோதமாக டொமினிகன் தீவுக்குள் நுழைந்தது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவரை வியாழன் அன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறியது.
அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆன்டிகுவா தீவிலிருந்து மெகுல் சோக்ஸி கடத்தி வரப்பட்டதாக அவரது வழக்கறிஞர் வாதாடினார். பிணைத் தொகையாக 10,000 டாலர் செலுத்துவதாக கூறினார். ஆனால், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தது தொடர்பான வழக்கு ஜூன் 14 தேதிவிசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொமினிக்கன் அரசின் எதிர்க்கட்சித் தலைவர் லெனாக்ஸ் லிண்டனுக்கும் சோக்சிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அந்தக் குற்றாச்சாட்டை அவர் மறுத்து வந்தார். இந்நிலையில், நீதிமன்றத்துக்கு லிண்டன் வந்துள்ளார். அவருடன் சோக்சியின் உறவினர் சேத்தன் இருந்ததாக கூறப்படுகிறது.