பிஹாரில் பொறியியல், மருத்துவ கல்வியில் பெண்களுக்கு 33.3 சதவீத இடஒதுக்கீடு வழங்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. உயர் கல்வி தொடர்பாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் பேசியதாவது:
மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் பெண்களுக்கு 33.3 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இதன்மூலம் உயர் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பிஹார் மாநில மாணவ,மாணவியர் வெளிமாநிலங்களுக்கு கல்வி பயில செல்வதை தடுத்து மாநிலத்திலேயே தொழில்கல்வி பயில செய்ய ஊக்குவிக்க வேண்டும். மாநிலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவகல்விக்காக 2 புதிய பல்கலைக்கழங்கள் உருவாக்கப்படும். இதற்கான மசோதாக்கள் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதுகுறித்து பிஹார் மாநில உயர் கல்வித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "பிஹாரில் 38 அரசு பொறியியல் கல்லூரிகளும் 17 தனியார் பொறியியல் கல்லூரிகளும் செயல்படுகின்றன. 18 மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் பெண்களுக்கு 33.3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். நடப்பு 2021-22-ம் ஆண்டிலேயே இடஒதுக்கீடு நடைமுறை அமல் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.- பிடிஐ