கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்படும் தடுப்பூசி வாங்கிய முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் இருக்கும் சீரற்ற தன்மை, தடுப்பூசி கொள்முதலில் செய்யப்பட்டுள்ள தவறுகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு என பல விஷயங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணையை நடத்தி வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எல்.என்.ராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு இதுவரை வாங்கிய தடுப்பூசி விவரம் முழுவதையும் பிரமாண பத்திரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கரோனா தடுப்பூசி வாங்கியது தொடர்பான முழு வரலாற்றையும் நீதிமன்றத்திடம் ஆவணமாக சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இன்றைய தேதி வரை எவ்வளவு கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை வாங்கி உள்ளது போன்ற விவரங்கள், இனி மக்களுக்கு 3 கட்டங்களாக மத்திய அரசு தடுப்பூசி செலுத்தப் போகும் விவரங்கள், அதன் முழுதிட்டம் ஆகியவற்றையும் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்என்று நீதிபதிகள் உத்தரவிட் டுள்ளனர்.
மேலும், அந்த பிரமாணப் பத்திரத்தில் கிராமங்களில் இதுவரை எவ்வளவு பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, நகரங்களில் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் இடம்பெற வேண்டும். அதேபோல் கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வளவு மருந்துகளை வாங்கி உள்ளது, அந்த மருந்து எவ்வளவு கையிருப்பு உள்ளது என்ற விவரத்தையும் வெளியிட வேண்டும்.
இன்னும் 2 வாரங்களில் இந்தஅனைத்து விவரங்களும் அடங்கியபிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், மாநில அரசுகளும் தடுப்பூசி கொள்கை, மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக கொடுக்கப்படுகிறதா என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.- பிடிஐ