லோக் ஜனசக்தி கட்சியின் ஆறு வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் சனிக்கிழமை வெளியிட்டார். அதில் 3 டிக்கெட்டுகளை தனக்கு, மகன், சகோதரனுக்கு ஒதுக்கியுள்ளார் அவர்.
ராம் விலாஸ் பாஸ்வான் பிஹார் மாநிலம் ஹாஜிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகன் சிராக், சகோதரர் ராம் சந்தர் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பிஹாரில் பாஜகவுடன் கூட்டணி வைத்து லோக் ஜனசக்தி கட்சி 7 தொகுதியில் போட்டியிடுகிறது. அதில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஸ்வான் அறிவித்தார். ஜமூய் தொகுதியில் சிராக், சமஸ்திபூர் தொகுதியில் ராம் சந்தர் போட்டியிடுகின்றனர்.
ஹாஜிபூர் தொகுதி பாஸ்வானுக்கு புதிதல்ல. பல முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.ஆனால் 2009ல் நடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட பிஹார் முன்னாள் முதல்வர் ராம் சுந்தர் தாஸிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
பாஸ்வானுக்கு மிக நெருக்கமானவரும் பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடை யவருமான ராம கிஷோர்சிங் வைசாலி தொகுதியில் போட்டியிட உள்ளார்.,
கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்று போட்டியிட முடியாமல் உள்ள சூரஜ் பான் சிங் என்பவரின் மனைவிக்கும் லோக் ஜனசக்தி கட்சி டிக்கெட் கொடுத்துள்ளது.இவர் முங்கர் தொகுதியில் நிற்கிறார். சத்யானந்த சர்மா என்பவரை இந்த கட்சி நாளந்தா தொகுதியில் நிறுத்துகிறது.
ககாரியா தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதை கட்சி விரைவில் அறிவிக்கும் என்றார் சிராக். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தன்னை சிறுமைப்படுத்தியதாக அதிலிருந்து விலகிய பாஸ்வான் பாஜகவுடன் கூட்டணி ஏற்படுத்தினார் .
குஜராத் கலவரம் காரணமாக 2002ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார் பாஸ்வான். நீதிமன்றம் ஒன்று இந்த வழக்கில் மோடிக்கு தொடர்பில்லை என நற்சான்று கொடுத்துவிட்ட பிறகு குஜராத்தில் நடந்த கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கு பற்றி இனி கேள்வி எழுப்ப எந்த முகாந்திரமும் இல்லை என்று லோக் ஜனசக்தி கட்சியினர் கூறி வருகின்றனர்.