கரோனா உயிரிழப்பை தடுக்கும் 2டிஜி மருந்தை மத்திய அரசிடம் இருந்து பெற்று நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
டிஆர்டிஓ மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் நிறுவனமும் இணைந்து ‘2-டியாக்சி-டி-குளுக்கோஸ்' என்ற கரோனா வைரஸ் தொற்றுக்கான எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. சுருக்கமாக ‘2டிஜி' என்று அழைக்கப்படும் இந்த மருந்து குளுக்கோஸை அடிப்படையாகக் கொண்டது. நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 3 கட்டங்களாக இந்த மருந்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரண்டு கட்டமாக 18 முதல் 65 வயதுவரை என 40-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
தண்ணீரில் கலந்து குடிக்கக் கூடிய இந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்தது. 2டிஜி மருந்து கரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதால், மிதமான, தீவிரமான பாதிப்புள்ள கரோனா நோயாளிகளுக்கு 2டிஜி மருந்தை வழங்கலாம். தற்போதுள்ள மருந்துகளைவிட, இந்த மருந்து ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்கிறது.
மத்திய அரசிடம் இருந்து 2டிஜி மருந்தைப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மருத்துவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் மருத்துவர் வினோத்குமார் ஆதிநாராயணன் கூறும்போது, “2டிஜி மருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முடிவுகள் மிக சிறப்பாக இருந்தன. 2டிஜி மருந்தை பயன்படுத்தும்போது உயிரிழப்பு வெகுவாகக் குறையும். மத்திய அரசிடம் இருந்து 2டிஜி மருந்தைப் பெற்று நோயாளிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கரோனா உயிரிழப்புகளைத் தடுக்கலாம். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் மனு கொடுத்திருக்கிறோம். அவரும், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். விரைவில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்” என்றார்.