பிரதமர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் கடிதங்களுக்கு நேரடியான பதிலை குறிப்பிட்ட நேரத்தில் தர வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி ‘தி இந்து'வுக்கு மத்திய அரசுப் பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, கடந்த ஜூன் 18-ல் பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலா ளர் நிருபேந்திர மிஸ்ரா துறை செயலாளர்களுக்கு ஒரு அவசர சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில், பிரதமரின் அலுவலகத் திலிருந்து பதில் கேட்டு அனுப்பப்படும் கடிதங்களுக்கு சுற்றி வளைக்காமல், சுருக்கமாக, நேரடியாக தாமதம் செய்யாமல் விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்ற தகவலுடன் கூடிய ஒரு கடிதம் அமைச் சரவை செயலாளர் அஜித் சேத் அலுவலகத்திலிருந்தும் ஒரு சுற்றறிக்கையாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவை பிரதமரின் மறைமுகமான உத்தரவுதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை என அந்த துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதுபற்றி ‘தி இந்து'விடம் மத்திய அரசுத் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ‘‘பிரதமர் பதவி ஏற்றதும் மோடி எங்கள் அனைவரையும் அழைத்து நடத்திய கூட்டத்திலும் இதே போன்ற ஒரு உத்தரவை இட்டார். அதில், எந்த ஒரு பிரச்சினையா னாலும் நேரடியாக தம்மிடம் அதி காரிகள் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி அதற்காக, தனியாக ஒரு தொலைபேசி எண்ணும் அளித்திருக்கிறார்’’ என்றனர்.
இதன்மூலம், மத்திய அமைச்சர் கள் எங்களுக்கு நெருக்குதல் அளித்தால் அதுபற்றி பிரதமரிடம் நேரடியாகப் புகார் செய்யலாம் எனவும், எனவே அமைச்சர்கள் மற்றும் அதன் செயலாளர்களுக்கு ஒரு புதிய முறையில் பணிகளின் நடவடிக்கை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதனால், பிரதமர் நரேந்திர மோடி தான் நினைத்ததை வேகமாக செய்து முடிப்பதில் சிக்கல் வராமல் இருப்பதற் காகவே, அமைச்சர்களுடன் சேர்த்து அவர்களின் அதிகாரிகளுக் கும் கடிவாளம் அமைத்து விட்டதாக ஐஏஎஸ் அதிகாரிகள் கருதுகின்றனர்.