கரோனா வைரஸ் தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன் வைக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் 11 மாநில முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன்எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கரோனா தொற்றின் இரண்டாவது அலையை நாடு எதிர்கொண்டு வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமாக உள்ளது. இது அனைவரையும் அவசரநிலைக்கு தள்ளியுள்ளது.
3-வது அலை
இதுதவிர கரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.
நாட்டில் இதுவரை 3.1 சதவீதம் பேருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசியின் 2 தவணைகளும் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி தடுப்பூசி நிறுவனங்கள் லாபமடைய முயற்சிக்கின்றன.
வெளிநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பூசிகளை விற்பனை செய்ய மாநிலங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முன்வரவில்லை. மாநிலங்களின் நிதியில் சிக்கல் ஏற்பட்டால் கூட்டாட்சியும் பலவீனம் அடையும். நம்மை போன்ற ஜனநாயக அரசியலுக்கு இது உகந்ததாக இருக்காது.
இந்தச் சூழலில், மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகளை வழங்கும் கடமையில் இருந்து தன்னை மத்திய அரசு விடுவித்துக் கொள்வதற்கான முயற்சிகள் தென்படுவது துரதிருஷ்டவசமானது.
நிதி நெருக்கடி ஏற்படும்
தடுப்பூசிகளை வாங்குவதற்கான சுமை மாநிலங்கள் மீது சுமத்தப்பட்டால் அவற்றின் நிதி நிலைமை நெருக்கடியை எதிர்கொள்ளும்.
பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் மாநிலங்களின் மீது சுமத்தப்படுவது கூட்டாட்சி அமைப்பின் அடிப்படைக்கு எதிரானது. ஆரோக்கியமான கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களின் நிதி நிலைமை வலுவாக இருக்கவேண்டியது முக்கியம்.
எனவே, கரோனா தடுப்பூசிகளை வாங்கி, அவற்றை மாநிலங்களுக்கு விலையில்லாமல் வழங்கி இலவச தடுப்பூசி திட்டத்தை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு அனைவரும் அழுத்தம் அளிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள மாநிலங்களின் தேவைகள் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
கரோனா தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க மாநிலங்கள் ஒன்றாக நிற்க வேண்டும். தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன் வைக்க வேண்டும்.
அதற்கு அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியே தற்போதைய அவசியத் தேவையாக உள்ளது.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.- பிடிஐ