கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தை இந்தியாவில் விற்பனை செய்யவும், தயாரிக்கவும் இந்திய மருத்துவ கவுன்சில் ஏற்கெனவே அனுமதி வழங்கியது. இதனை டாக்டர் ரெட்டீஸ் பார்மா நிறுவனம் நமது நாட்டில் தயாரிக்கவும், விற்கவும் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக இந்த தடுப்பு மருந்தை தமது நிறுவன ஊழியர்களுக்கு செலுத்தி பரிசோதனையும் செய்தது
டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம். 91 சதவீத செயல் திறன் கொண்ட ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பு மருந்து ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து முதல் தவணையாக 1.60 லட்சம் டோஸ்களும், அதன் பின்னர் 60 ஆயிரம் டோஸ்களும் ஹைதராபாத்துக்கு வந்தன. தற்போது 3-ம் முறையாக 3 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் -வி தடுப்பு மருந்துகள் செவ்வாய்கிழமை அதிகாலை 3.43 மணிக்குவந்தது என ஜிஎம்ஆர் ஹைதராபாத் ஏர் கார்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெறும் 20 நிமிடங்களில் இதனை மிகவும் பாதுகாப்பாக டாக்டர் ரெட்டீஸ் பார்மாநிறுவனத்திற்கு 20 டிகிரி வெப்பநிலையில் அனுப்பி வைத்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிதான் இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளில் அதிகபட்சமாக 30 லட்சம் வரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி இம்மாதம் 2-வது வாரம் முதல் மக்களுக்கு விற்பனை செய்யப்படும் என டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.