ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டினத்தின் முத்துக்கூறு பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தையா. இவர் 3 வகையான கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு இலவசமாக வழங்கி வந்தார். இதனைப் பெற சமூக இடைவெளியின்றி மக்கள் பெருமளவில் திரண்டதால் மருந்து விநியோகத்தை நிறுத்த அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து பரிசோதனைக்கு பிறகு கண்ணில் விடும் சொட்டு மருந்தைத் தவிர, மற்ற மருந்துகளை விநியோகம் செய்ய ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதைத் தொடர்ந்து கிருஷ்ணப்பட்டினத்தில் மருந்து தயாரிக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
இதுகுறித்து நெல்லூர் மாவட்டஆட்சியர் சக்கரதர பாபு தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் பூஷண் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சக்கரதர பாபு கூறியதாவது:
ஆனந்தையாவின் கரோனா மருந்துக்கு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, அவருடன் கலந்தாலோசித்தோம். தற்போது மூலிகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மருந்து தயாராக இன்னமும் 4 அல்லது 5 நாட்கள் வரை ஆகும். அப்போது நாங்கள் அறிவிப்போம். அதுவரை கிருஷ்ணப்பட்டினத்திற்கு யாரும் வரவேண்டாம்.
ஆனந்தையாவின் மருந்தை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்ய மொபைல் செயலி உருவாக்கப்படும். நாட்டின் எந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கும் இந்தமருந்து விநியோகம் செய்யப்படும். இதற்கு தபால் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. மருந்து விநியோகம் தொடங்கியதும், இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வரக்கூடாது. அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வந்தாலே போதுமானது. மேலும் இங்கு வருவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் முகக்கவசம் அணிவதும் கட்டாயமாகும்.
இவ்வாறு நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சக்கரதர பாபு கூறினார்.