ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரை மையமாக கொண்டு நேற்று காலை 8 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அருகில் உள்ள தும்கா, ஜமத்ரா ஆகிய பகுதிகளிலும் எதிரொலித்தது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். ஒருசில விநாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது. அண்டை மாநிலமான பிஹாரின் ஒரு சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது குறித்து பிஹார் வானிலை மைய இயக்குனர் ஏ.கே.சென் கூறும்போது, ‘‘கயா, முங்கர், ஜமுய் மற்றும் பங்கா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’’ என்றார்.