வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற் காக, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் அணுசக்தி மற்றும் பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகள் தொடர்பான இரு நாடுகளுக் கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவலை வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான இந்த மாநாடு, கடந்த 2000 ஆண்டு முதல் மாஸ்கோவிலும் டெல்லியிலும் ஆண்டுதோறும் மாறிமாறி நடைபெறுகிறது.
அணு சக்தி, ஹைட்ரோகார்பன், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளிடையிலான உறவை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.