இந்தியா

நட்புக்கு அச்சாரமிட்ட மோடி: பாகிஸ்தானை விமர்சிக்கும் பாஜக.வினர் இடையே மாற்றம் வருமா?

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை முன்வைத்து இந்தியா மீது பாகிஸ் தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்நாடு, எதிரி நாடாகவே கருதப்படுகிறது. பாஜக தலைவர்களும் பாகிஸ்தானை எதிரி நாடகவே கருதி கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக பாஜகவினர் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தா னுடன் இணைத்தும் பேசி வந்தனர். மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் கிஷோர் கடந்த ஏப்ரல் 2014-ல் மக்களவை தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், “பிரதமர் வேட் பாளர் மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் சென்று விட வேண்டும்” என்றார்.

இதன் பிறகு கடந்த அக்டோபரில் நடந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசும்போது, “பிஹாரில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பாட்டாசு கொளுத்தி கொண்டாடுவார்கள். இதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என கூட்டத் தினரிடம் கேள்வி எழுப்பினார்.

சகிப்பின்மை சர்ச்சை எழுந்த போது அதில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானும் சிக்கினார். அப்போது பாஜக வின் தேசிய பொதுச் செயலாளர் களில் ஒருவரான கைலாஷ் விஜய் வர்கியா, “ஷாருக்கான் வசிப்பது இந்தியாவில் என்றாலும் அவரது ஆன்மா பாகிஸ்தானில் உள்ளது” என்றார். பாஜக எம்.பி. சாத்வீ பிராச்சி, “ஷாருக்கான் ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட்… இவரை போன்றவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடவேண்டும்” என்றார்.

இந்நிலையில் கடந்த 25-ம் தேதி ஆப்கானிஸ்தான் சென்றிருந்த பிரதமர் மோடி யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தானின் லாகூ ருக்கு திடீர் பயணம் செய்தார். அதிகாரப்பூர்வ நடைமுறைக்கு வெளியே நட்புறவை வளர்க்கும் வகையில் மோடியின் பாகிஸ்தான் பயணம் இருந்தது. இங்கு அந்நாட்டு அதிபர் நவாஸ் ஷெரீபின் பிறந்த நாளான அன்று அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்தி விட்டு திரும்பியுள்ளார் மோடி. இது குறித்து தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள மோடி, “நவாஸ் ஷெரீபின் உபசரிப்புகள் என் மனதை தொட்டு விட்டன. அவர் என்னை வரவேற்கவும், வழியனுப்பவும் விமானநிலையம் வந்திருந்தார்” என்று மகிழ்ந்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “அட்டல்ஜி மீதான நவாஸ் ஷெரீப் சாயபின் அன்பு மனதை தொடுகிறது. அட்டல்ஜியுடன் பழகியதை நவாஸ் ஷெரீப் நினைவூட்டியதுடன் அட்டல் ஜியை தான் நலம் விசாரித்ததாக அவரிடம் கூறும்படி தெரிவித்தார்” என்று மோடி கூறி இருந்தார்.

மோடி தனது மூன்றாவது ட்வீட்டில், “ஷெரீப் வீட்டில் அவரது குடும்பத்தினருடன் இனிய மாலைப் பொழுதை கழித்தேன். அங்கு நவாஸ் ஷெரீப் பிறந்த நாள், அவரது பேத்தியின் திருமணம் என இரண்டு விழாக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட மோடி அதனுடன் நட்புறவு ஏற்படுத்த அச்சாரமிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானை எதிரி நாடாக கருதி பாஜகவினர் இனிவிமர்சனம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT