மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் | கோப்புப்படம் 
இந்தியா

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி 

பிடிஐ

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கரோனா வைரஸுக்குப் பிந்தைய பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 11.30 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்குச் சென்ற பொக்ரியால் அங்குள்ள தனி வார்டு ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் நீரஜ் நிஸ்சல் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

பொக்ரியால் உடல்நலம் குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி, சில நாட்களில் மீண்டும் தனது வழக்கமான அலுவலகப் பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார். பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களிலும் காணொலி மூலம் பங்கேற்றார்.

12்-ம் வகுப்புத் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அரசு 2 நாட்களில் முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பை எதிர்பார்த்து நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கரோனா தொற்றுக்குப் பிந்தைய பாதிப்பு காரணமாக பொக்ரியால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பொக்ரியால் விரைவாக குணமடைய ட்விட்டரில் மாணவர்களும், பெற்றோரும், அரசியல் தலைவர்களும், பாஜக நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT