நாட்டில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துவது மக்களுக்கு மட்டும் அல்ல, நாட்டின் பொருளாதாரதுக்கும் ஆரோக்கியமானது என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
2020-21ஆம் நிதியாண்டுக்கான ஜிடிபி விவரங்களை நேற்று வெளியிட்டபின், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவது மிகவும் முக்கியமானது. இது கரோனா வைரஸ் 3-வது அலையை வரவிடாமல் தடுக்கும். அதே நேரத்தில் பொருளாதாரமும் மீண்டெழ உதவும். பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ளதால், அதைப் பிரித்துப் பார்க்க முடியாது.
ஆதலால், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துவது என்பது மக்களின் உடல்நலத்துக்கு மட்டுமல்ல, பொருளாதாரத்தின் ஆரோக்கியத்துக்கும் நல்லது. தடுப்பூசி செலுத்துவதைத் தொடர்ந்து மத்திய அரசு வேகப்படுத்தி வருகிறது. இது தொடர்பான திட்டங்களையும், எதிர்காலப் பணிகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரிவாகக் கூறியுள்ளது.
பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் செல்வதற்கு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும், மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தும் டோஸ்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினாலும், அதைச் செலுத்தும் பரவல் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஜூன் மாதத்தில் 12 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது.
கரோனா வைரஸ் முதல் அலையைப் போல் 2-வது அலையில் பொருளாதாரத்தில் பாதிப்பு பெரிதாக இல்லை. ஆனால், பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு நிதி மற்றும் பணரீதியான கொள்கை, ஆதரவு அவசியம்.
நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை நாடு அடையும் என இப்போதே கூறுவது கடினமான ஒன்று. ஏனென்றால் தற்போது கரோனா வைரஸ் 2-வது அலையில் பல மாநிலங்கள் சூழப்பட்டுள்ளதால் கணிப்பது கடினமாக இருக்கும்.
ஆனால், கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.6 சதவீதமாகச் சரியும் எனக் கணக்கிட்ட நிலையில் 7.3 சதவீதமாகவே வீழ்ந்துள்ளது. கடைசி காலாண்டில் 1.6 சதவீதம் பொருளதார வளர்ச்சி பெற்றுள்ளது. மைனஸ் 8 சதவீதம் சரியும் என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டதைவிடக் குறைந்துள்ளது''.
இ்வ்வாறு சுப்ரமணியன் தெரிவித்தார்.