இந்தியா

தெலங்கனாவில் 16 வயது சிறுமி பலாத்காரம்: 5 பேர் மீது நிர்பயா சட்டத்தின் கீழ் வழக்கு

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் உள்பட 5 பேர் மீது நிர்பயா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் தேகுலபள்ளி என்ற பகுதியில் இந்தக் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மதராச தண்டா என்ற இடத்தில், கடந்த வியாழக்கிழமை இரவு 16 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார்.

அப்போது வீட்டிற்கு செல்ல வேண்டிய சிறுமியை, அருகே இருந்த ஒரு தனி இடத்திற்கு கடத்தி சென்று, தனது நண்பர்கள் 4 பேரையும் தொலைப்பேசி மூலம் அந்த ஆட்டோ டிரைவர் அழைத்துள்ளார்.

அங்கு, 18 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுவன் உள்பட 5 பேர் கொண்ட கும்பல், சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்பு, சிறுமியிடம் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சில நாட்கள் மன உளைச்சலில் இருந்த சிறுமி, உறவினர் ஒருவரிடம் விஷயத்தைத் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, சிறுவன் உள்பட 5 பேர் மீது நிர்பயா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், சிறுமியை பரிசோதனைக்கு உட்படுத்த கம்மம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி ராஜீவ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT